இந்தியாவின் ஒரிஸா மாநிலத்தில் புகழ்பெற்ற பல கோவில்கள் அமைந்துள்ளன. ஒரிசா என்றவுடனே நினைவுக்கு வருவது ஒடிசி நதனம், சில்கா ஏரி மற்றும் அங்குள்ள பழம்பெரும் கோவில்கள்தாம். புராதனமான கோவில்களில் முக்கியமானவை மூன்று சிறப்பு மிக்க ஊர்களில் உள்ளன. அவை பூரியிலுள்ள ஜகன்னாதர் ஆலயமும், கொனார்க் நகரிலுள்ள புகழ் பெற்ற சூரியனார் கோவிலுமாகும். மற்றது புவனேஸ்வரம். இவை மூன்றும் ஒரு முக்கோண வடிவில் அமைந்துள்ளன.இது தங்க முக்கோணம் என்று அழைக்கப்படுகிறது. இவை ஒரிஸாவின் பாரம்பரியத்தையும், பெருமையையும், இலகுவாக, அப்பாரம்பரியம் புதுமையுடன் கலந்து விட்ட பாங்கினையும் பறை சாற்றி நிற்கின்றது. ஒரிஸாவின் தலைநகரான புவனேஸ்வரத்தில் அமைந்துள்ளது லிங்கராஜர் திருக்கோவில். இத்திருக்கோவில் அதன் பழமைக்குப் பிரசித்தி பெற்றது. லிங்கராஜா திருக்கோவில் ஒரிசா மாநிலத்தின் தனித்துவம் பெற்ற கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் உள்ளது. இன்றும் வழி பாட்டிலுள்ள மிக முக்கியமான சிவஸ்தலங்களில் ஒன்றாக விளங்கிய போதிலும், அதன் சிற்பக்கலைச் சிறப்புக்கென்றே இதனைக் காண பல்லாயிரம் பேர் வந்து செல்கின்றனர். ஒரிசாவின் அதிக அளவு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் கண்டுகளிக்கப்பட்ட இடங்களில் இத்திருக் கோவிலும் ஒன்று. 55 மீட்டர் உயரக் கோபுரம் ஊர் எல்லையைத் தொடு முன்னரே காணக் கிடைக்கும். பிரம்மபுராணத்தில் கோடிலிங்கம் கொண்ட ஊராக புவனேஸ்வரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவல் இத்திருக் கோவிலின் சிறப்பை மேலும் கூட்டுகிறது. பிரதான கோவிலைச் சுற்றிலும் சுமார் 150 சிறு சிறு சந்நிதிகள் உள்ளது மனத்தை மலைக்க வைக்கும் காட்சியாகும்.லிங்கராஜர் திருக்கோவிலில் ஏழாம் நூற்றாண்டில் யாயத்தி கேசரி என்ற மன்னரால் கட்டப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. இம்மன்னரே கேசரி சாமராஜ்யத்தின் தலைநகரை, ஜெய்ப்பூரிலிருந்து புவனேஸ்வரத் திற்கு மாற்றினர் என்ற வரலாற்றுக் குறிப்பும் உள்ளது.இத்திருக்கோவில் கட்டிடத்தின் வயதினை கணக்கிடும் போது, பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. புவனேஸ் வரத்தில் உள்ள மற்றொரு கோவிலான பரமேஸ்வரர் ஆலயமே எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் என்றும அறியப்பட்டுள்ளது.லிங்கராஜர் திருக்கோவிலில் உள்ள நாடக மண்டபமும், உணவு மண்டபமும் பிற்காலத்தில் கட்டப்பட்டவை. கலிங்க மன்னர் மூன்றாம் அனங்கபீமாவின் பதி மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டும் இங்கு உள்ளது. எனவே, கலிங்க மன்னர்களாலும் இத்திருக்கோவில் பராமரிக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. சிவபெருமான் பார்வதியிடம் பெனார சை விட புவனேஸ்வரமே என்னை மிகவும் கவர்கிறது என்று கூறியுள்ளார். இதை கேட்ட பார்வதி, மாடு மேய்க்கும் பெண் வேடத்தில் புவனேஸ்வரத்தினை காணவந்தார். அப்போது க்ரித்தி மற்றும் வாசா என்று இரண்டு பூதங்கள் பார்வதியினை திருமணம் செய்து கொள்ள முன் வந்தன.பார்வதிக்கு ஏற்பட்ட தீட்டினைக் கழிக்க சிவபெருமான் பிந்து சாகர் குளத்தை உருவாக்கினார். பின் அவ்விடத்திலேயே கீர்த்திவாசர் என்ற பெயரிலும் லிங்கராஜர் என்ற பெயரிலும் அருள்பாலிக்கிறார், என்பது இத்திருக்கோவிலின் தல புராண மாகும்.லிங்கராஜர் கோவிலின் சுற்றுப் பிரகாரம் மட்டும் சுமார் 2,50,000 சதுர அடியில் பரந்து விரிந்துள்ளது. கோவில் வளாகத்தினுள்ளேயே பிந்து சாகர் குளம் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி மிகப் பெரிய சுற்றுச்சுவர் உள்ளது. அக்கோவிலின் கோபுரம் சுமார் 190 அடி உயரமாகும். இந்த கோபுரத்தில் மிக அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இக்கோபுரம் உலகப் பிரசித்தம் பெற்றது. லிங்கராஜர் திருக்கோவிலின் சிவலிங்கம் கண்போரைக் கவர்கிறது. அதன் விசேடம் என்னவென்றால், அந்த லிங்கம் வெறும் எட்டு அங்குலம் உயரம் மட்டுமே இருக்கும். ஆனால், லிங்கத்தின் சுற்றளவு சுமார் எட்டு அடியாகும். பகவதி அம்மன் சந்நிதி வடமேற்கு திசையில் அமைந் துள்ளது. மொத்தம் 22 பூஜைகள் ஒரே நாளில் நடத்தப்படுகின்றன. பிந்து சாகர் குளத்தில் நடக்கும் தெப்பத் திருவிழா, இங்கு நடத்தப்படும் மிக முக்கிய திருவிழாவாகும். புதுமை அறிவியல் யுகத்தில், பழமையை பாறைசாற்றிக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான ஒரு புண்ணிய ஸ்தலம் லிங்கராஜர் திருக்கோவில்!
01.03.2012
14 years ago
No comments:
Post a Comment