‘‘எங்களால இங்க வாழ முடியாது. குந்த எடம் குடுத்து எங்கியாது கொண்டு போய் விட்டுடுங்க. நாங்க கூலி வேல செஞ்சி பொழச்சிக்கிறோம். இந்த பிரச்சனை தீரும்ன்னு நாங்க நெனக்கில. உங்கள கெஞ்சி கேக்கிறோம். இந்த உதவி மட்டும் எங்களுக்கு செஞ்சாப் போதும்’’ என்று ஓ.... என்று அழுகிறார் எறையூரைச் சேர்ந்த தலித் இந்துவான மாரிமுத்து.எறையூர் என்பது ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட ஒரு பெரிய கிராமம். இங்கு வன்னிய கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகவும், தலித் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாகவும் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள ஜெபமாதா அன்னை சர்ச்சில் பிரதான வாயிலில் வன்னியர்கள் செல்ல வேண்டும். தலித் மக்கள் பக்கவாட்டில் உள்ள நுழை வாயிலில் செல்ல வேண்டும். திருமணம் முடித்து வருவதானாலும், சவத்தை எடுத்து வருவதானாலும் இந்த வழியாகத்தான் அவர்கள் வர வேண்டும். இந்த சர்ச்சில் எது நடந்தாலும் அது தலித்துகளுக்கு தனியாகவும், வன்னியர்களுக்கு தனியாகவும் நடத்துவது வாடிக்கை. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற திருவிழாவின் போது, மேல்சாதி ஆண்கள் தங்கள் கைகளில் இருந்த கேமரா செல்போன் மூலம் தலித் பெண்களை போட்டோ எடுத்துள்ளனர். தங்கள் பெண்களை புகைப்படம் எடுத்ததால் கோபமடைந்தவர்கள் ஏன் என்று கேட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற வாக்குவாதம் விரோதமாக மாறி அன்றிலிருந்து தலித் மக்கள் ஜெபமாதா அன்னை சர்ச்சிக்குள் செல்வதில்லை. அதற்கு பதிலாக தங்களுடைய பகுதிலேயே உள்ள சிறிய கோயிலான சகாயமாதா அன்னை சர்ச்சில் வழிபாடு நடத்தி வருகின்றனர். இதனையட்டி, சிறிய சர்ச்சில் தங்களுக்கென்று ஒரு பாதிரியாரை நியமிக்க வேண்டும் என்று தலித் மக்கள் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக கடலூர் பாண்டிச்சேரி மறை மாவட்ட பேராயர் ஆனந்தராயர்க்கு மனு அனுப்பினர். ஆனால் இதற்கான எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை. இதற்கிடையே தலித் கிறிஸ்வர்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து சகாயமாதா சர்ச்சில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதத்தை விடுதலைச் சிறுத்தைகள் இணைப் பொதுச் செயலர் சிந்தனைச் செல்வன் தொடங்கி வைத்தார். மார்ச் 7ம் தேதி தொடங்கிய உண்ணாவிரதத்தில் இரு பெண்கள் மயக்கமடைந்தனர். இதனால் 9ம் தேதி கோரிக்கை மனு ஒன்றை ஊர்வலமாக சென்று சர்ச்சின் பிரதான வாயிலில் நுழைந்து பங்கு தந்தையிடம் கொடுக்க இருந்தனர். போராட்டம் முடிவடையும் நேரத்தில் திடீர் என்று கலவரம் ஏற்பட்டது. இதில் தலித் மக்களின் மொத்த வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. உடைமைகள் சூறையாடப்பட்டன. இதனிடையே காவல்துறையினர் சுட்டத்தில் வன்னிய கிறிஸ்தவர்கள் இருவர் உயிரிழந்தனர்.தொடர்ந்து ஏற்பட்ட தாக்குதலில் பழைய காலனி என்று சொல்லக் கூடிய தலித் கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியில் ஒரு வீடும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. வீட்டில் இருந்த நாற்காலிகள், கட்டில், மெத்தை, டிவி, ஃப்ரிட்ஜ், போட்டோ, டிவிடி என அனைத்துப் பொருட்களும் உடைக்கப்பட்டு தெருக்களில் வீசப்பட்டன. சமைக்கக் கூட பாத்திரம் இல்லை. அரிசி, பருப்பு, உப்பு, புளி எல்லாம் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. கலவரத்திற்கு பின் அமைச்சர் பொன்முடி கலவர இடத்தை பார்வையிட்டு சென்றார். இரண்டு நாட்கள் அரசு உணவு வழங்கியது. அதன் பிறகு யாரும் வரவில்லை. ‘‘நாங்கள் நான்கு நாட்களையாய் பட்டினி இருக்கிறோம்’’ என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.தாக்குதலைப் பற்றி அல்லிமுத்து என்ற இந்து தலித் பெண் கூறும்போது ‘‘சண்டையா இருந்ததால நா புள்ளைங்கல உஸ்கூல்ல இருந்து கூட்டிக்கிட்டு வந்தேன். அப்போ திருநா மாதிரி கூட்டமா எதிர்க்க ஒரு கும்பல் வந்திச்சி. வழியில மாட்ன என்ன அவங்க அடிக்க வந்தாங்க. நா இந்துன்னு சொன்னா உட்டுடுவாங்கன்னு நெனச்சி, ‘நா இந்துங்க,ன்னு சொன்னேன். அப்போ கூட என்ன விடல அடிச்சாங்க. என் ஊட்டு ஓட்டயெல்லாம் கடப்பாறையால அடிச்சி நொறுக்கிட்டாங்க’’ என கண் கலங்கி முடித்தார்.இவ்வளவு பிரச்சனைக்குப் பின் தலித் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்துவதே பெரிய சவாலாக உள்ளது. நிலங்கள் முழுவதும் ஆதிக்கசாதிகளிடம் உள்ளன. இவர்களில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் விவசாயக் கூலிகள். இவர்கள் அவர்களின் நிலங்களில்தான் வேலை செய்தாக வேண்டும். பிரச்சனைகளுக்குப் பிறகு அவர்கள் யாரும் வேலைக்குச் செல்வதில்லை. இதனால் கூலியும் இல்லை. மாடு வைத்திருப்பவர்கள் பால் கறந்து கொண்டு போனால் கூட்டுறவு சொசைட்டியில் வாங்க மறுத்துவிடுகிறார்கள். எந்த வீட்டில் நுழைந்தாலும் சாவு வீடு போலவே எல்லோரும் சோகத்தில் முழ்கியுள்ளனர். ‘‘காலையில் வெளியில போறது கூட அவங்க எடத்த தாண்டிதான் போகணும். அதனால நாங்க வெளிய போறதில்ல. பயமா இருக்கு’’ என்று தயங்கி தயங்கி சொல்கிறார் அந்த ஊர் பெண் ஒருவர்.வீடுகள் அடித்து நொறுக்கும் போது ஒரு வீட்டில் கோமாவில் கிடந்த வயதான மூதாட்டியைக் கூட விட்டு வைக்க வில்லை வெறியாட்ட கும்பல். பாட்டியை அடித்து உதைத்ததில் முகம், கழுத்து, கை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டு ரத்தக் கட்டு ஏற்பட்டுள்ளது. ஆனால் தனக்கு இதெல்லாம் நடந்ததென்று கூட அந்த பாட்டிக்கு தெரியாது. கோமாவில் இருப்பவரைக் கூட இப்படி தாக்கியதற்குக் காரணம் இவரது மகனான மேத்யூதான் உண்ணாவிரதத்திற்கு ஏற்பாடு செய்தவர். அதுமட்டுமல்லாது தொடர்ந்து தலித் மக்களிடையே வேலை செய்து வருபவர். இவரது தாயை தாக்கியது போலவே தலித் மக்களுக்காக அங்கு தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்த ரட்சகநாதனின் தாயை அடித்துள்ளனர். ‘‘என்ன அடிச்சாப் பரவாயில்ல எம்புள்ளக்கு மூத்தரத்த குடிக்க வெச்சானுங்க’’ன்னு தேம்பி தேம்பி தன் மகனுக்கு சிறுநீர் கொடுத்ததை சொல்கிறார் மரிக்கொழந்த. இதேபோல முன்னணியில் இருந்து செயல்பட்டவரான இந்து தலித்தான குழந்தைசாமி வீட்டில் உள்ள துணிமணிகள், அவரின் பட்டப்படிப்பிற்கான சான்றிதழ் அனைத்தையும் வெளியே போட்டு எரித்து இருக்கிறார்கள்.‘‘இந்த கஷ்டத்த எல்லாம் எங்களால தாங்க முடியல. எங்கள சாதி கொடும தாங்க முடியலன்னுதா எங்க முன்னோருங்க கிறிஸ்தவரா மாறினாங்க. ஆனா இன்னிக்கும் எங்க தீண்டாமை ஒழியல. இன்னுமும் தனி சுடுகாடு, தனி வழி, சாமி எங்க தெருக்கு வராது. எங்களுக்கு அசிங்கமா இருக்கு. வேணாம் எங்களுக்கு கிறிஸ்தவமே வேணாம். நாங்க முஸ்லிமா மாறுவத தவிர வேற வழி தெரியல. இதே மாதிரி பண்ணாக்கா கண்டிப்பா நாங்க எல்லோரும் முஸ்லிமா மாறிடுவோம்’’ என்று நா தழுதழுக்க சொன்னார் ஆரோக்கியதாஸ். இவர் நடத்தி வந்த டீக்கடை, பேண்டு வாத்தியம் அனைத்தையும் கலவரத்துக்கு பலி கொடுத்துள்ளார்.கலவரத்தில் அடிப்பட்ட 15 பேரில் இரண்டு மூன்று பேர் வீட்டிற்கு வந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் விழுப்புரம் மற்றும் உளூந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவ்வளவு பெரிய கலவரம் நடந்தும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவராஜ் இந்த ஊர் பக்கமே திரும்பி பார்க்கவில்லை. மற்ற அரசியல் கட்சிகள் அறிக்கை விடுவதோடு சரி. பட்டினியிலும், அச்ச உணர்விலும், மன ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளை சமாளிக்க முடியாமலும் வாழும் இந்த மக்களை நேரில் வந்து யாரும் பார்க்கவில்லை என்பது இவர்களின் பெரும் குறையாகவே உள்ளது.இதுபோன்று தச்சூரில் உள்ள சர்ச்சில் சாதிப் பிரச்சனை ஏற்பட்ட போது அங்கு முன்னணியில் இருந்து செயல்பட்ட, அருளப்பா மேனிலைப்பள்ளியின் தாளாளர் ஜான்சுரேஷ் இந்தக் கலவரம் குறித்து கூறும் போது, இந்திய மற்றும் தமிழக திருச்சபைகளில் சாதி வெகு ஆழமாக வேரூன்றி உள்ளது. எறையூரில் நடந்தது மோதல் அல்ல. தாக்குதல். எவ்வளவு தாக்குதல்கள் நடந்தாலும் தலித் கிறிஸ்தவர்களுக்கு சட்ட பாதுகாப்பு இல்லை. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கை பதிவு செய்ய முடியாது. இப்போது கூட சிதம்பரம் கோயிலில் தவறு செய்த தீட்சிதர்களை காவல்துறை கைது செய்தது. ஆனால் இங்கு பேராயரை கைது செய்ய முடியாது. தலித் கிறிஸ்தவர்களை தாக்கியோரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்கிறார் ஆக்ரோஷமாக.இதுதொடர்பாக வன்னியர்களிடம் பேசியதில் ஒட்டு மொத்தமாக நமக்கு கிடைத்த தகவலின்படி, தலைமுறை தலைமுறையாக இந்த பழக்கம் உள்ளது. அதனை மாற்ற முடியாது என்கின்றனர்.இந்து, கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாடின்றி தலித் மக்கள் கோருவதெல்லாம் தங்களுக்கு உத்தரவாதமான, கண்ணியமான வாழ்க்கை வேண்டும். விவசாய நிலங்கள் எங்களிடம் இல்லை. அவர்களின் நிலங்களை நம்பியே உள்ளோம். எங்களை அடிப்பவர்களிடம் நாங்கள் எப்படி வேலைக்குச் செல்வது? அதனால் எங்களுக்கு இலவசமாக விவசாய நிலங்களை அரசு கொடுக்க வேண்டும். தலித் கிறிஸ்தவர்களை பொறுத்தமட்டில், உயர்சாதியினர் போலவே நாங்களும் சர்ச்சில் பாகுபாடின்றி வழிபட உரிமை வேண்டும். எங்களுகென்று தனிபாதை, தனி சுடுகாடு என்று எதுவும் இருக்கக் கூடாது. எங்கள் தெருவுக்கும் சப்பரம் வர வேண்டும். இல்லை என்றால் சிறிய சகாயமாதா கோயிலில் தனி பாதிரியாரை நியமித்து பங்கு பிரித்துக் கொடுக்க வேண்டும். பணமாகவும், நகையாகவும், பொருட்களாகவும் நிறைய இழந்து விட்டோம். பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நாங்கள் மனிதர்களாக மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்கின்றனர் சுயமரியாதைக்காக போராடும் இந்த மக்கள்.
அமுதா
No comments:
Post a Comment