1851ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் நகரத்தில் இருந்து ‘நியூயார்க் டெய்லி டிரிபியூன்’ என்ற பத்திரிகை வெளிவந்தது. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான சார்லஸ் டானா என்பவர் லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த ஒருவரைத் தொடர்பு கொண்டு தங்கள் பத்திரிகையில் கட்டுரைகள் எழுத வேண்டும் என்றும் தங்கள் பத்திரிகையின் லண்டன் நிருபராகப் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சார்லஸ் டானாவுடன் ஏற்கெனவே அவருக்குத் தொடர்பும் தோழமையும் இருந்ததால் அவருடைய கோரிக் கையை லண்டன்வாசி ஏற்றுக் கொண்டார்.அந்த லண்டன்வாசி ஜெர்மனியில் பிறந்து ஆளும் வர்க்கத்தின் தொல்லைகளால் பல நாடுகளுக்குச் சென்று இறுதியில் லண்டனில் வாழ்ந்தவர். பகல் முழுவதும் லண்டன் நூலகத்தில் படிப்பது, குறிப்பெடுப்பது இரவு முழுவதும் வீட்டு மாடியில் அமர்ந்து எழுதுவது - இதுவே அந்த லண்டன் வாசியின் வாடிக்கையானது. இந்த வேளையில்தான் சார்லஸ் டானா நியூயார்க் டெய்லி டிரிபியூன் பத்திரிகையில் அவரை எழுதத் தூண்டினார்.
இந்தக் காலகட்டத்தில் இந்தி யாவை வெள்ளையர் ஆண்டு கொண்டிருந்தனர். தமிழக மக்களின் நிலையை - வெள்ளையர்களின் அடாவடித்தனங்களை இந்தக் காலகட்டத்தில் வேறு எந்த வெளி நாட்டு அறிஞனும் எழுதியதாகச் சான்று இல்லை. இந்திய அறிஞர்கள் கூட தமிழக நிலைமையைப் பதிவு செய்திருக்கிறார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த மனிதர் 1857 ஆகஸ்ட் 28 தேதியிட்ட நியூயார்க் டெய்லி டிரிபியூனல் பத்திரிகையில் ‘இந்தியாவில் நிகழ்ந்த சித்திர வதைகளைப் பற்றிய விசாரணை’ என்ற கட்டுரையில்,“சென்னை கமிஷனிடம் சுதேசிகள் செய்த புகார்களில் ஒன்றை இங்கு காண்போம்:'
சென்ற ஆண்டில் எங்களது நெற்பயிர் மழையில்லாது சாவியானதால், வழக்கம் போல் வரி செலுத்த முடியாது போனது. 1837ஆம் ஆண்டில் கலெக்டராக ஈடன் இருந்தபொழுது நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்த ஷரத்துப் பிரகாரம், நஷ்டத்துக்கு வரிவஜா செய்ய வேண்டும் என்று ஜமாபந்தியில் கேட்டோம். வஜா செய்யாததால் நாங்கள் எங்களது பட்டாக்களைப் பெற மறுத்தோம், அதன் பின் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை, தாசில்தார் எங்களை வரிகட்ட வேண்டும் என்று கொடுமையாகக் கட்டாயப்படுத்தினார். நானும் வேறு சிலரும் சிலரது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டோம். அவர்கள் எங்களை வெயிலில் நிறுத்தினார்கள்; குனியச் செய்து முதுகில் கருங்கற்களை தூக்கி வைத்தார்கள். கொதிக்கும் மணலில் அவற்றைச் சுமந்து கொண்டு நின்றோம். 8 மணிக்குப் பிறகு நாங்கள் போய்ச் சாப்பிடுவதற்கு அனுமதித்தார்கள். இத்தகைய கொடுமை மூன்று மாத காலம் நீடித்தது.இருபத்தைந்து நாட்களுக்குப் பிறகு எமது சொத் துக்களை வரிபாக்கிக்காகப் பறித்தார்கள்; பிறகு அவற்றை விற்றார்கள். எங்களது பெண்களும் கேவலமாக நடத்தப்பட்டார்கள்” என்று தமிழர்களும், தமிழச்சிக ளும் வெள்ளையர்களால் எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்; உரிமைகளை இழந்தார்கள் என்பதை ஜெர்மனில் வாழ்ந்து கொண்டு அமெரிக்கப் பத்திரிகையில் எழுதி உலகறியச் செய்தான் அந்த அறிஞன்! ஆம்! அவன் அறிஞர்களுக்கெல்லாம் அறிஞன்; அதனால்தான் தேசம் கடந்து, இனம் கடந்து, மொழி கடந்து அவனால் மக்களுக்காகச் சிந்திக்க முடிந்தது; சிந்தித்ததை உலக மக்களுக்கு ஒளிவு மறைவின்றி சொல்ல முடிந்தது. அந்தப் பேரறிஞன்தான் காரல் மார்க்ஸ்.
மதுரை வளவன்
No comments:
Post a Comment