ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப்படுத்துவதற்கு முன்பே பிரான்ஸ் தேசத்தை அடிமைப்படுத்திவிட்டனர். ஆங்கிலேயரின் அடாவடித்தனங்களை ஏற்றுக்கொள்ள இயலாமல் பிரான்ஸ் நாட்டு மக்கள் குமைந்தனர். அதனால் பிரான்ஸ் நாட்டு ராணுவ வீரர்கள் ஆங்கில ராணுவத்தை எதிர்த்துப்போரிடத் தொடங்கினர். இந்தப் போர் நூறாண்டுகளுக்கும் மேல் தொடர்ந்தது.இந்தச் சூழலில் பிரான்ஸ் தேசத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவள், ஆங்கிலேயரிடமிருந்து தன் நாட்டை விடுவிக்க விரும்பினாள். அதனால் பிரான்ஸ் தேச ராணுவத்தில் சேர்ந்தாள். போர்ப் பயிற்சி பெற்றாள். ஆணுடை தரித்துக் களத்தில் இறங்கி ஆங்கிலேயரை தோற்கடிக்கவும் செய்தாள். அவளுடைய வீரமும் விவேகமும் பிரான்ஸ் ராணுவத்தினரை எழுச்சி கொள்ளவும்; எதிரி ராணுவத்தை அதிர்ச்சி கொள்ளவும் வைத்தன.
எதிர்பாராச் சூழலில் எதிரிகளிடம் அவள் சிக்கிக் கொண்டாள். அப்போது அவளுக்கு வயது பத்தொன்பதுதான். ஆணுடை தரித்த அவளை இரண்டு கால்களிலும் விலங்கிட்டு இழுத்துச் சென்றனர். மதவாதிகளும் ராணுவத்தினரும் சூழ்ந்த சபையில் அவள் விசாரிக்கப்பட்டாள். அப்போது குற்றப்பத்திரிகையை வாசித்தனர். அதைக் கேட்டு அவளிடமிருந்து புன்னகை மட்டுமே வெளிவந்தது. “எதற்காக நீ ஆணுடை அணிந்து கொள்கிறாய்?” என்று கேட்டனர் எதிரிகள். “என் தேசத்திலிருந்து உங்களை வெளியேற்றியதும் நான் பெண் உடைக்கு மாறிவிடுவேன். அதுவரை ஆணுடைதான் தரிப்பேன்” என்றாள் ஆவேசமாக! எரிச்சலுற்ற கயவர்கள் அவளை சித்ரவதைக் கூடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே நீதிபதி முன்னிலையில் ஒரு பேப்பரைக் கொடுத்து அவளிடம் கையெழுத்திட வற்புறுத்தினர். அதை அவள் படித்துப்பார்த்தாள். குற்றங்களை அவள் ஒப்புக் கொண்டதுபோல் அதில் எழுதப்பட்டிருந்தது. அதைப்படித்த அவள் அந்தப் பேப்பரை தூக்கி எறிந்தாள். அங்கிருந்து மற்றெரு அறைக்கு அவளை இழுத்துச் சென்றனர். ஆயுதங்களைக் காட்டி அவளை மிரட்டினர். அப்போதும், “நீங்கள் என் உயிரைப் பறித்தாலும் கவலை இல்லை; என் உயிருக்காக என் தேச விடுதலைப் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டேன்” என்றாள் கம்பீரமாக. ஏற்கெனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவள், தேச விடுதலைக்கு முன் எதிரிகளிடம் சிக்கிவிட்டோமே என்று கவலைப்பட்டாள். இருப்பினும் கம்பீரம் மட்டும் அவளுக்குக் கைகொடுத்தது.
மதக்கோட்பாடுகளை மீறியதாகவும், ஏசுவை இழிவுபடுத்தியதாகவும் நீதிபதி என்ற நீசர்கள் அவள்மீது குற்றம் சுமத்தினர். “என் தேசத்தை நேசிப்பதும், என் தேச விடுதலை பற்றி யோசிப்பதும் உங்களுக்கு வேறுவிதமாகத் தெரிகிறது. மதத்தின் பெயரால் என்னை மண்டியிட வைக்க நினைக்கும் உங்கள் முயற்சி வெற்றி பெறாது” என்றாள். ஏணியில் வைத்து அவளைக்கட்டி பொது மக்கள் மத்தியில் கொண்டு சென்றனர். தலைமுடியை மழித்தனர்... அருகிலேயே அவளைப் புதைப்பதற்கு குழியும் தோண்டினர். அதன்பின் அவளை கழுமரத்தில் கட்டி வைத்தனர். அடுத்து கழுமரத்தின் அடிப்பக்கத்தில் கயவர்கள் தீ வைத்தனர்... கூடியிருந்த மக்கள் தேம்பித்தேம்பி அழுதனர். ஆனால் அவள் நெஞ்சுரத்துடன் நின்று கொண்டிருந்தாள்.
பற்றிய நெருப்பு அவளை பற்றிப் படர்ந்து தின்று முடித்தது. சிறிது நேரத்தில் அவள் எரிந்து சாம்பலானாள். கொடியவர்கள் அவளை தீக்குத் தின்னக் கொடுத்து 577 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் பிரான்ஸ் நாட்டு படைப்புகளும் திரைப்படமும் அவளை இன்றும் பிரான்ஸ் தேச மக்களின் நெஞ்சங்களில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வீரமங்கைதான் ஜோன் ஆஃப் ஆர்க்.
பற்றிய நெருப்பு அவளை பற்றிப் படர்ந்து தின்று முடித்தது. சிறிது நேரத்தில் அவள் எரிந்து சாம்பலானாள். கொடியவர்கள் அவளை தீக்குத் தின்னக் கொடுத்து 577 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் பிரான்ஸ் நாட்டு படைப்புகளும் திரைப்படமும் அவளை இன்றும் பிரான்ஸ் தேச மக்களின் நெஞ்சங்களில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வீரமங்கைதான் ஜோன் ஆஃப் ஆர்க்.
மதுரை வளவன்
No comments:
Post a Comment