முகலாயர்கள் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த காலம். அப்போது அவன் மன்னனாக இருந்தான். ஆக்ரா நகரில் ‘மினா பஜார்’ என்ற சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை கூடும். இந்தச் சந்தையில் மன்னர் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் முக்கிய பிரமுகர்களின் குடும்பத்தினர் மட்டும்தான் கலந்து கொள்வர். மற்றவர்களுக்கு வேறுவேறு இடங்களில் வேறுவேறு சந்தைகள் உண்டு. வியாபாரம் ஒழுங்காக நடக்கிறதா? ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்வதற்காக மன்னனாகிய அவன், ஒருநாள் மினா பஜாருக்குச் சென்று பார்வையிட்டான்.ஜனசந்தடிமிக்க அந்த மினா பஜாரில் ஒரு மிட்டாய் கடை இருந்தது. அந்தக் கடையை ஒரு சுறுசுறுப்பான பெண் கவனித்துக் கொண்டிருந்தாள். அந்தக் கடையையும் அந்தப் பெண்ணையும் கவனித்த அந்த மன்னன், அந்தக் கடைக்குச் சென்றான். மன்னனைக் கண்டதும் மிட்டாய்க் கடையில் இருந்த பெண் திரைச் சீலைக்குள் மறைந்து கொண்டாள். இருப்பினும் அந்தக் கடையை நோட்டமிட்ட மன்னன், ஒரு மிட்டாயைக் காட்டி, “அது என்னவிலை?” என்றான்.
திரைச்சீலை மறைவிலிருந்து அந்தப் பெண் கிண்டலுக்காக “நூறு பொற்காசுகள்” என்றாள். அதைக்கேட்ட மன்னன் நூறு பொற் காசுகளைக் கொடுத்தான். அதைப் பெற்றுக் கொண்ட அந்தப் பெண் அந்த மன்னனின் அறியாமையை நினைத்துச் சிரித்தாள். “ஏன் சிரிக்கிறாய்?”என்றான் மன்னன். “மிகவும் சாதாரண மிட்டாய் தான் இது. இந்த மிட்டாயை இவ்வளவு காசு கொடுத்து வாங்குகிறீர்களே, உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?” என்றாள் அந்தப் பெண்.
அப்போது திரைச்சீலை அவிழ்ந்து விழுந்தது. அதனால் அந்தப் பெண்ணின் முழு அழகும் அந்த மன்னன் கண்ணில் பட்டது. அவள் அழகில் தன்னை இழந்தான் மன்னன். அந்தப் பெண் அந்த நகரின் மிகப் பெரிய பிரமுகரின் மனைவி, அந்த மன்னனுக்கு ஏற்கெனவே திருமணம் நடந்துவிட்டது. அத்துடன் பல பெண்களின் கணவனாகவும் அந்த மன்னன் வாழ்ந்து கொண்டிருந்தான். அடுத்தவன் மனைவி அவள்; பல பெண்களுக்குக் கணவன் அவன்! இந்தச் சூழலில் தான் மினா பஜாரில் அவளை அந்த மன்னன் சந்தித்தான். அவள் அழகில் தன்னை இழந்தான். அதனால் இரவெல்லாம் தூங்காமல் தவித்தான். எப்படியும் அந்தப் பெண்ணை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று துடித்தான்.
இறுதியில் அந்தப் பெண்ணை அந்த மன்னன் திருமணம் செய்து கொண்டான். அதற்குப் பின்பும் சில பெண்களை அந்த மன்னன் மனைவியாக்கிக் கொண்டான். இருப்பினும் அந்த மிட்டாய் கடைக்காரப் பெண் மீது தனித்த காதல் கொண்டிருந்தான் அந்த மன்னன். அவளுக்கு பதின்மூன்று குழந்தைகள் பிறந்தன. மீண்டும் கருவுற்றாள். பதினான் காவது பிரசவத்தின்போது தாம் இறந்து விடுவோம் என்று அவள் எண்ணினாள். அதனால் தான் இறந்தால் தனக்கு அழகிய நினைவுச் சின்னம் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று கணவனாகிய மன்னனிடம் அவள் கோரிக்கை வைத்தாள். அவளுடைய நிலை மன்னனை நிலைகுலையச் செய்தது.
மருத்துவர்கள் அவளைக் காப்பாற்ற பாடுபட்டனர். இருப்பினும் ஒரு நாள் அவள் மரணத்தைத் தழுவினாள். மன்னன் இடிந்து போனான். அவளைப் பற்றிய கவலையே மன்னனை ஆக்கிரமித்தது. அப்போது மனைவியின் கோரிக்கையை நிறைவேற்ற மன்னன் முடிவு செய்தான். ராஜஸ்தானில் இருந்து சலவைக் கற்களும் ஆப்கானிஸ்தானம், பாகிஸ்தான், அரேபியா, ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து ரத்தினக் கற்களும் கொண்டு வரப்பட்டன. உஸ்தத் அகமது லாகூர் என்ற இஞ்சினியர் தலைமையில் இருபதாயிரம் தொழிலாளர்களும், ஆயிரம் யானைகளும் பதினெட்டு ஆண்டுகள் உழைத்து 1648ம் ஆண்டு ஆக்ரா யமுனை ஆற்றங்கரையில் அந்த நினைவுச் சின்னம் கட்டி முடிக்கப்பட்டது.
உலகிலேயே அதிகமாக படப்பிடிப்பு நடந்தது இந்த நினைவுச் சின்னத்தில்தான்! உலக அதிசயங்களில் ஒன்றாக இன்றும் போற்றப்படுவதும் இந்த நினைவுச் சின்னம் தான். இந்தியா, பாரசீகம், துருக்கி, இஸ்லாமிய கட்டடக் கலைகளை முன்மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்ட நினைவுச் சின்னமும் இதுதான். ஆம்! காதல் மனைவிக்காக அந்த மன்னன் கட்டிய அந்த நினைவுச் சின்னம்தான் தாஜ் மஹால்!
அந்தக் காதல் மனைவி மும்தாஜ்; காதல் மனைவிக்காக தாஜ்மஹாலைக் கட்டி முடித்தவன் மன்னன் ஷாஜஹான்!
மதுரை வளவன்
No comments:
Post a Comment