1924ம் ஆண்டு கேரளத்தில் இருக்கும் வைக்கத்தில் சிவன் கோயிலுக்கு அருகில் தாழ்த்தப்பட்டவர்கள் நடக்கக் கூடாது என்று உயர்சாதியினர் தடை விதித்தனர். கேசவமேனன், மாதவன், ஏ.கே.பிள்ளை, கிருஷ்ணசாமி அய்யர், ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் இந்தக் கொடுமையை எதிர்த்துப் போராடினர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பெரியார் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து ‘வைக்கம்வீரர்’ என்று புகழப்பட்டார். இந்தப் போராட்டத்தை நேரடியாக கண்ட பதினாறு வயது இளைஞன் தேசபக்தனாக வளர்ந்தான். அன்னியர் உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்து உப்புச்சத்தியாக் கிரகத்தை காந்திஜி தொடங்கினார். இதன் தாக்கம் கோழிக் கோடு கடற்கரையில் அவனை உப்பு தயாரிக்க வைத்தது.
வெள்ளையர் அரசு அவனைக் கைது செய்து பல மாதங்கள் சிறை வாழ வைத்தது. இதுதான் அவனுடைய முதல் சிறை வாழ்க்கை. இதன்பின் அரசியலை விட அவனுக்கு எழுத்தின் மீதே ஆர்வம் அதிகரித்தது. மற்ற எழுத்தாளர்களைப் போன்று தொன்மையான இலக்கியங்களைப் படித்து தன்னுடைய கற்பனை வளத்தை விரிவாக்கிக் கொள்ள விரும்பாத அவன், மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் துன்ப, துயரங்களையும் ஏக்கங்கள், எதிர்பார்ப்பு களையும் உள்வாங்கிக் கொண்டு இலக்கியம் படைக்க விரும்பினான். அதற்காக பிறந்த ஊரை விட்டு வெளியேறினான்.
தேசம் முழுவதும் பயணித்தான். கையில் காசிருந்த போது ரயிலிலும், பஸ்சிலும் சென்ற அவன், காசில்லாத போது நடந்தே பல ஊர்களுக்கும் சென்றான். இந்தப் பயணத்தின்போது அவன் கண்ட காட்சிகள் மனதில் பதிவாகின. சில நேரங்களில் பிச்சை எடுத்து அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தான். இந்த நாடோடி வாழ்க்கை அவனை பைத்திய மாக்கியது. அதனால் சில காலம் மன நோய் மருத்துவமனையில் தங்கி அவன் சிகிச்சை பெற்றான்.
இந்த பைத்தியக்கார அனுபவமும் எழுத்துக்குக் கை கொடுத்தன. மீண்டும் மீண்டும் அடித்தட்டு மக்களைச் சந்தித்தான். அவர்களை தன்னுடைய படைப்புகளின் கதாநாயகர்களாகவும், அவர்களுடைய பிரச்சினைகளை கருப்பொருள்களாகவும் கொண்டு எழுதத் தொடங்கினான். அந்த எழுத்துக்களுக்கு மலையாள மக்கள் மகத்தான வரவேற்பைக் கொடுத்தனர். அவனுடைய படைப்புகள் நாடகங்களாகவும் நாட்டியங்களாகவும், அரங்கேறின.
காலப்போக்கில் சினிமாக் காரர்கள் அவனுடைய கதைகளை வாங்கி திரைப்படமாக்கினர். மதிலுகள், பார்கவி நிலையம் போன்ற அவனுடைய படங்கள் வாசிக்கும் பழக்கமில்லாத மக்களிடமும் அவன் பெயரை உச்சரிக்க வைத்தன. அவனுடைய படைப்புகள் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டன.
தமிழ் வாசகர்கள் மத்தியிலும் அவனுடைய படைப்புகளுக்கு தனித்த வரவேற்பு இன்றும் உண்டு. இறுதிக் காலத்தில் ‘விடைபெறுகிறேன்’ என்ற நீண்ட கடிதம் ஒன்றையும் அவன் எழுதினான். அந்தக் கடிதத்தைத் தான் மறைந்த பின்புதான் வெளியிட வேண்டுமென்று குறிப்பும் எழுதினான். ஒரு நாள் அவன் இறந்தான். அன்று மலையாளப் பத்திரிகைகள் அனைத்தும் அவனுடைய விடை பெறுகிறேன் என்ற கடித்தத்தை வெளியிட்டன.
கேரள அரசும் அவன் இறந்த அன்று விடுமுறை அறிவித்து அஞ்சலி செலுத்தியது. அவன் வாழ்க்கையில் முதன் முதலில் பாதிப்பை ஏற்படுத்திய வைக்கம் போராட்டத்தை நினைவுபடுத்தும் வகையிலும், தாம் பிறந்த பகுதியை சிறப்பிக்கும் முறையிலும் தன் பெயருக்கு முன்னால் ‘வைக்கம்’ என்பதை இணைத்தான்.
இந்த ஆண்டு அவனுடைய நூற்றாண்டாகும். அந்த மகத்தான கலைஞன்தான் வைக்கம் முகம்மது பஷீர்!
மதுரை வளவன்
No comments:
Post a Comment