Thursday, May 22, 2008

சோக வரலாற்றின் வீர காவியம்

இரவு பகலாக உழைக்கவேண்டும்; சாக்கடை ஓரத்தில் வாழ வேண்டும்; மாற்றுடை இன்றி இருக்கும் துணியையே மொத்தமாகக் கிழியும்வரை உடுத்தவேண்டும்; வாரிசுகள் கல்வி கற்க நினைத்தாலும் இயலாது; நோய்வாய்ப்பட்டால் மருத்துவ உதவியின்றி மரணத்தைத் தழுவ வேண்டும். இதுவே ஒருகாலத்தில் அமெரிக்கத் தொழிலாளர்கள் அனுபவித்து வந்த வாழ்க்கை முறை.

இந்த இழிநிலையை மாற்ற அமெரிக் காவில் இருந்த தொழிற்சங்கம் முடிவு செய்தது. முதலில் எட்டுமணி நேரம் மட்டுமே வேலை செய்வோம் என்ற முழக்கத்தை முன்வைத்து அணிவகுப்பு நடத்துவதென அமெரிக்கத் தொழிலாளர்கள் முடிவு செய்தனர். 1886 மே 1 அன்று அமெரிக்காவில் உள்ள நியூயார்க், சின்சினாட்டி, சிகாகோ ஆகிய நகரங்களில் வாழ்ந்த தொழிலாளர்கள் அந்தந்த ஊர்களில் அணி திரண்டனர். ‘எட்டுமணி நேரம் தான் பணி செய்வோம்’ என்று வீதியில் முழங்கிச் சென்றனர். வீதிகளில் சென்ற மக்களுக்கு இது புது அனுபவமாக இருந்தது. தொழிலாளர்களின் முழக்கம் அவர்கள் காதுகளில் பட்டுத் தெரித்தது.


கைகட்டி, வாய் பொத்தி இட்ட பணிகளைச் செய்து, கொடுத்ததை கும்புடுபோட்டு வாங்கி வாழ்ந்து வந்த தொழிலாளர்கள் வீதியில் அணிவகுப்பதும், உரிமையை வலியுறுத்தி முழக்க மிடுவதும் அதிகார வர்க்கத்தை ஆத்திரம் கொள்ளச் செய்தது. இதை அனு மதித்தால் எதிர்காலத்தில் தங்களுக்கு ஆபத்தாகிவிடும் என்று எண்ணி ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் ரகசியமாகச் சந்தித்து இதுபற்றிப் பேசின.


அராஜகத்தின் மூலம்தான் தொழிலாளர் வர்க்கத்தை அடக்க முடியும், தொடர்ந்து அவர்களை ஆளமுடியும் என்று முடிவு செய்தனர். இந்த சதித்திட்டம் சிகாகோவில் தான் திட்டமிடப்பட்டது. இதை அறியாத தொழிலாளர் வர்க்கம் சிகாகோ நகர வீதிகளில் முழக்கமிட்டபடி அணி வகுத்துச் சென்றது. அவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுத்தனர். அதில் பல நூறு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.


காவல்துறையினர் தாக்குதலைக் கண்டித்து 1986 மே 3 அன்று மக்கார் மிக் தொழிற்சாலையின் முன் 12 ஆயிரம் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கருங்காலிகளின் துணையுடன் காவல்துறையினர் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்கள் மீது வெறித்தனமான தாக்குதலைத் தொடுத்தனர். பல தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆறு தொழிலாளர்களைச் சாகடித்தனர். ஆம்! உலகத் தொழிலாளர்களின் உரிமைக்காக சிகாகோவில் ஆறு தொழிலாளர்கள் தங்கள் உயிரையும் ரத்தத்தையும் கொடுத்து மே தின வரலாற்றை எழுத அடித்தளமிட்டனர். கொல்லப்பட்ட ஆறு தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்த 1886 மே 4 அன்று ஹேமார்க்கெட்டில் சிகாகோ தொழிலாளர்கள் கூடினர். இங்கு நடந்த கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த தொழிற் சங்கத் தலைவர் பீல்டனை போலீஸார் அடித்து கீழே தள்ளினர். அப்போது நடந்த கைகலப்பில் ஒரு போலீஸ்காரன் கொல்லப்பட்டான்.


இந்தக் கொலை வழக்கில் தொழிற் சங்கத் தலைவர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், சாமுவேல் பீல்டன், மைக்கேல் ஸ்காப், ஆஸ்கார் நீபே, அடால் ஃபிஷர், ஜியாத் ஏஞ்செல், லூயிலிங் ஆகியோரை இணைத்து ஆளும் வர்க்கம் சிறையில் அடைத்தது. 1887 நவம்பர் 11 அன்று ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், அடால் ஃபிஷர், ஜியார்ஜ் ஏஞ்செல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். லூயி லிங் சிறை யிலேயே மடிந்தார். சாமுவேல் பீல்டனும் மைக்கேல் ஸ்கேப்பும் ஆயுள் தண்டனையும் அஸ்கார் நிபே பதினைந் தாண்டுகள் சிறைத் தண்டனையையும் அனுபவித்தனர்.


ஆம்! 1886 மே 1 அன்று சிகாகோ வீதியில் எட்டுமணி நேர வேலைக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆறு தொழிலாளர்கள் சாகடிக்கப்பட்டனர். அதையட்டி நான்கு தொழிற்சங்கத் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஒருவர் சிறையிலேயே மடிந்தார்... இருப்பி னும் அந்தத் தியாகிகள் சிந்திய ரத்தத் துளிகளின் தியாகம் உலகம் முழுவதும் பற்றிப்படர்ந்து வருவது அந்தத் தியாகிகளின் தியாகங்களுக்குக் கிடைத்த சிறப்பாகும்!


மதுரை வளவன்

No comments: