அவனுக்கு அப்போது இளம் வயது. அவன் வீட்டில் ‘ஊக்கா’ என்ற துப்புரவுத் தொழிலாளி பணியாற்றினார். அந்தத் துப்புரவுத் தொழிலாளியை அவன் தொட்டுவிட்டாலோ, அவன் மீது அந்தத் துப்புரவுத் தொழிலாளியின் மேனி பட்டுவிட்டாலோ, அவனை அவனுடைய தாய் குளித்துவிட்டு, வரும்படி சொல்லுவாள். தாய் சொல்லைத் தட்டாத அவனும் அன்னையின் விருப்பப்படி துப்புரவுத் தொழிலாளியைத் தொட்டபோதெல்லாம் குளிப்பதை வழக்கமாகக் கொண்டான்.ஒரு நாள் துப்புரவுத் தொழிலாளி ஊக்காவும் மனிதர்தான்! நாமும் மனிதர்தான்! அப்படியிருக்க அவரைத் தொட்டால் எதற்காக நம்மை குளிக்கும்படி அன்னை வலியுறுத்துகிறார்? நாமும் அதன் காரணம் புரியாமல், காரணம் கேட்காமல் ஒவ்வொரு முறையும் குளிப்பதும் எதற்காக? என்றெல்லாம் அவன் எண்ணினான். இது பற்றி அன்னையிடம் கேட்டு விட வேண்டும் என்று முடிவு செய்தான் அந்த நாளும் வந்தது.
துப்புரவுத் தொழிலாளி ஊக்காவை அவன் தொட்டு விட்டான். அதைப் பார்த்த அவனுடைய அன்னை அவனை குளித்து விட்டு வரும்படி பணித்தார். அதற்கு, “அம்மா! நான் கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் குளித்தேன்; மீண்டும் இப்போது நான் எதற்காகக் குளிக்க வேண்டும்?” என்று வினாத் தொடுத்தான். அம்மா அவனையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதனால், “அம்மா! அவருக்கும் ரெண்டு கண்; நமக்கும் ரெண்டு கண்தான்! அவருக்கும் ரெண்டு கால்; நமக்கும் ரெண்டு கால்தான்; அவருக்கும் ரெண்டு கை; நமக்கும் ரெண்டு கைதான்; அவருக்கும் ரெண்டு காது; நமக்கும் ரெண்டு காது தான்! அவருக்கும் ஒரு உயிர் நமக்கும் ஓர் உயிர்தான். இப்படியிருக்கையில் அவரைத் தொட்டால் குளிக்கச் சொல்வது என்ன நியாயம்?” என்றான்.
மகனுடைய வாதத்தைக் கண்டு திகைத்த அவனுடைய தாய், “அவரைத் தொட்டால் தீட்டு ஏற்படும்!” என்றார். அதற்கு, “அம்மா! நம் வீட்டு அழுக்குகளை எல்லாம் அவர் தான் அகற்றுகிறார். நம் வீட்டு அசிங்கங்களையும் அவர்தான் சுத்தம் செய்கிறார். நாம் அசுத் தமாக்கும் அனைத்தையும் சுத்தமாக்கும் அவரைத் தொட்டால் தீட்டு என்பது எப்படி நியாயமாகும்? உங்களுடைய வார்த்தையை எப்போதும் நான் மீற மாட்டேன். இருப்பினும் தாங்கள் சொல்வது எனக்கு உடன்பட்டதாகத் தெரியவில்லை... அதனால் கேட்டேன்” என்றான் அவன். மகனுடைய வாதத்திறமையைக் கண்டு அசந்துபோய் நின்றாள் அவன் தாய். அதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட அவன், “அம்மா! நம்ம ஊக்கா தாழ்ந்த சாதியைச் சார்ந்தவர். அதனால் அவரைத் தொட்டால் தீட்டு ஏற்படும் என்கிறீர்கள். ஆனால் ராமாயணத்தில் கீழ் சாதியைச் சார்ந்த குகனை- ராமன் கட்டித் தழுவியதாக எனக்குப் படித்துச் சொல்லி இருக்கிறீர்கள். உயர்ந்த சாதியைச் சார்ந்த ராமன் கீழ்சாதியைச் சார்ந்த குகனை கட்டித் தழு வது சரியென்றால் நான் நம் ஊக்காவைத் தொடுவது எப்படித் தப்பாகும்? ஒன்று ராமாயணத்தில் சொல்லியிருப்பது தப்பாக இருக்க வேண்டும்; அல்லது நீங்கள் சொல்வது தப்பாக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் ராமாயணத்தில் தப்பாகக் சொல்லப்பட்டிருக்காது என்று எண்ணுகிறேன்” என்றான் அவன்! மகனின் வாதத்திறமையைக் கண்டு வாய்பிளந்து நின்ற அந்த அன்னைதான் புத்லிபாய்! அவருடைய மகன் தான் பிற்காலத்தில் மகாத்மா என்று அழைக்கப்பட்ட காந்திஜி!
No comments:
Post a Comment