அல்போனியாவில் பிறந்து ஆசிரியர் பணிக்காகவும் மதபோதனைக்காகவும் கல்கத்தாவிற்கு வந்து, சேரிப் பகுதியில் வாழும் மக்களின் துயரைக் கண்டு மனதிற்குள் அழுது அவர்களுக்காகத்தன் வாழ்க்கையை அர்ப்பணித்து உலக முழுதும் ‘அன்னை’ என்று ஆராதிக்கப்பட் டவர் அன்னை தெரஸா.
அதேபோன்று இந்த மண்ணில் பிறந்து தொழுநோயால் துடித்தோருக்குத் தோள் கொடுத்துத் துணை நின்று உழைத்து மறைந்தும் வாழ்கிறவனைப் பற்றி... 1914 டிசம்பர் 24 அன்று குஜராத்தில் வசதியான பிராமணக் குடும்பத்தில் அவன் பிறந்தான். செல்வச் செழிப்பிலேயே வளர்ந்தான். சின்னஞ்சிறு வயதில் அவன் பள்ளிக்கு காரில்தான் அனுப்பி வைக்கப்பட்டான்.
புலி அல்லது சிறுத்தைத் தோலினால் செய்யப்பட்டபடுதாவால் அந்தக் கார் கண்ணாடிகள் அடைக்கப்பட்டிருக்கும். வெளி உலகத்தில் இருக்கும் வறுமை, நோய் ஆகியவற்றில் தவிக்கும் மக்களை அவன் பார்த்துவிடக் கூடாது, அதன் மூலம் அவன் மனம் பாதித்துவிடக்கூடாது என்று அவனுடைய பெற்றோர் எண்ணினர்; எண்ணியபடி செய்தனர். ஆனால் அதையும் தாண்டி அவன் மனம் அக்கம் பக்கத்தைக் கவனித்தது. எளியோர் படும் துயர்கண்டு அவன் மனம் கலங்கியது.
அவனுக்கு ஒன்பது வயதான போது பிச்சைக்காரர்களைத் தேடித்தேடி வெள்ளிக் காசுகளை அள்ளி அள்ளிக் கொடுத்து மகிழ்ந்தான். படிப்புக்காக அவன் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். பாரிஸ்டர் பட்டமும் பெற்றான். வழக்குரைஞர் தொழிலைக் கொண்டு வாழ நினைக்காமல் தேச விடுதலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். தேசம் விடுதலை கண்டதும் அடுத்து என்ன செய்வது? என்று யோசித்தான்.
எந்த அரசு வந்தாலும் தொழுநோயாளிகளுக்கு விடிவு கிடைக்காது என்று எண்ணினான். அதனால் 1951 ஆம் ஆண்டு நாக்பூர் அருகில் உள்ள சந்திரபூரில் ‘ஆனந்தபன்’ என்ற ஆசிரமத்தைத் தொடங்கினான். இந்த ஆசிரமம் தொழுநோயாளிகளுக்குத் தொண்டு செய்வதில் கவனம் பதித்தது. அந்தக் காலத்தில் தொழுநோய் கொடிய நோயாகக் கருதப்பட்டது. அந்த நோய் வந்தவர்களை உறவுகளே ஒதுக்கி வைத்தன.
அந்த நோயைத் தடுக்கும் மருந்துகளும் அப்போது கண்டு பிடிக்கப்படவில்லை. தொழுநோயாளிகள் படும் துயரங்களைக் கண்டு அவன் பல இரவுகள் உறங்காது தவித்தான். இதற்கொரு முடிவு காண வேண்டும் என்று நினைத்தான் அப்போது அவன் செய்த காரியம் உலகில் எவரும் செய்யாத, செய்யத் துணியாத செயலாகும். அடுத்தவர் உடம்பை ஆராய்ச்சிக் கூட மாக மாற்றாமல் தன் உடம்பையே பரிசோதனைக் கூடமாக மாற்ற விரும்பினான். அதற்கு மருத்துவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தொழுநோய் அவனையும் தொற்றிக் கொள்ளும் என்று எச்சரித்தனர். இருப்பினும் தொழுநோயைப் பரப்பும் கிருமிகளை தன் உடம்பில் செலுத்தி சோதனையில் ஈடுபட்டு அவன் வெற்றியும் பெற்றான். அவனுடைய ஆசிரமத்தில் சேர்ந்த தொழு நோயாளிகள் உண்டு உறங்குவதோடு இருக்கவில்லை; அவர்களின் கல்வி அறிவை வளர்ப்பதற்காக அந்தப் பண்ணையில் ஒரு பள்ளி ஆரம்பித்தான்.
அந்தப் பள்ளியில் படித்து முடித்தவர்களுக்கு அங்கே ஒரு கல்லூரியையும் ஏற்படுத்தினான். அவர்கள் தொழில் அறிவு பெறுவதற்காக அந்தப் பண்ணையில் மாட்டுப் பண்ணைகளையும், கோழிப் பண்ணைகளையும், நெசவு மையங்ககளையும் அச்சகத்தையும் ஆரம்பித்தான். இந்தச் சூழல் தொழுநோயால் பாதிக்கப்பட்டு ஓரளவு குணமானவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. இவை அனைத்தும் இன்றும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அவனுடைய தொண்டுள்ளத்தைக் கண்டுணர்ந்த மகாராஷ்டிர மாநில அரசு பம்ராகர் என்னும் இடத்தில் இருந்த தரிசு நிலத்தில் சில ஏக்கரை அவனுக்குக் கொடுத்தது.
அந்தத் தரிசு நிலத்தை உழுது சீர்படுத்தி வளமாக்கினான். உணவுப் பயிர்களைப் பயிரிட்டு வளர்த்தான். அந்த நிலத்தில் கிடைத்தவற்றையே இறுதிக் காலம் வரை அவன் உண்டு வாழ்ந்தான். அவனுடைய மனைவி சாதனா, மகன்கள் விகாஸ், பிரகாஷ், தத்தெடுத்த பிஜிலி என்ற வளர்ப்பு மகள் ஆகிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தன்னுடைய தொண்டுப் பணியில் ஈடுபடுத்தினான். அவர்கள் இன்றும் அவன் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். அவனுடைய சேவையைப் பாராட்டி மகசேசே விருது, தாமியன் தத்தன் விருது, ஆகிய வெளி நாட்டு விருதுகளும் பத்மபூஷன் விருது, பத்மவிபூஷன் விருது ஆகிய உள் நாட்டு விருதுகளும் அவனைத் தேடி வந்தன.
“இறந்தவுடன் என் உடல் எரிக்கப்பட்டால் அது பூமியை அசுத்தமாக்கிவிடும். அதனால் என் உடம்பைப் புதைத்து மண்ணுக்கு உரமாக்க வேண்டும்” என்று அவன் உயில் எழுதி வைத்திருந்தான். அவன் உயிர் பிரிந்ததும் அவன் விருப்பப்படி மண்ணில் அவன் புதைக்கப்பட்டான். ஆம்! தொழுநோயாளிகளின் தோழனாக, நண்பனாக, தாயாக, தந்தையாக விளங்கிய அவன்தான் முரளிதர் தேவி தாஸ் ஆம்தே என்ற பாபா ஆம்தே!
மதுரை வளவன்
No comments:
Post a Comment