இங்கிலாந்து கடற்படைத் தளபதியாக இருந்த சர் எட்மண்ட் ஸ்லேட் என்பவனின் மகள் மாடலின் ஸ்லேட் சிறுவயதில் இயற்கையை ரசிப்பவளாகவும், இசை மீது பற்றுக் கொண்டவளாகவும், தனிமையை விரும்புபவளாகவும் வளர்ந்தாள். இசை மேதை பீதோவன் மீது அளவு கடந்த பற்றுக்கொண்ட அவள், பீதோவன் வாழ்ந்த இடங்களையும், அலைந்த காடுகளையும் தேடித் தேடிப் பார்த்து மகிழ்ந்தாள். அப்போதுதான் ரோமன் ரோலந்து எழுதிய நூல்களைப் படிக்கத் தொடங்கினாள்.
காந்திஜி பற்றி அவர் எழுதிய நூல் அவளை சிந்திக்க வைத்தது. அந்தச் சிந்தனை ரோமன் ரோலந்தைச் சந்திக்கத் தூண்டியது. சுவிட்சர்லாந்திற்குச் சென்று ரோமன் ரோலந்தைச் சந்தித்து காந்திஜி பற்றி அவள் விவாதித்தாள். அப்போது அவர், “மொத்தத்தில் காந்திஜியை இன்றைய கால ஏசுவாக நான் காண்கிறேன்” என்றார்.
இந்தக் கருத்து காந்திஜியைச் சந்திக்கவும் அவரைப் பற்றிய நூல்களைப் படிக்கவும் அவளைத் தூண்டியது. தாம் இந்தியாவிற்கு வருவது பற்றி காந்திஜிக்கு அவள் கடிதம் எழுதினாள். அவரிடமிருந்து அவளுக்கு அனுமதியும் வந்தது. இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்குப் புறப்படுவதற்குமுன் இந்தியப் பெண்கள் அணியும் ஆடைகளை அணிந்தாள்; மேற்கத்திய கலாச்சாரத்தை முற்றிலும் துறந்து இந்தியக் கலாச்சாரத்தை முழுமையாகப் பின்பற்றினாள்.
இங்கிலாந்தில் பருத்தி கிடைக்காததால் கம்பளி கொண்டு நூல் நூற்கப் பழகினாள். பெற்றோரிடம் விடைபெற்றுக் கொண்டு ஒரு நாள் இந்தியாவை நோக்கிப் பயணித்தாள். இந்தியாவிற்கு வந்த அவள், காந்திஜி குடியிருக்கும் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றாள்.
காந்திஜியைக் கண்டதும் அவர் காலில் விழுந்து வணங்கினாள். அவளை ஆசீர்வதித்த காந்திஜி, “நீ என் மகள்” என்று கூறியது அவளை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. அதன்பின் காந்திஜி காலடியே அவள் உலகமானது. அவருக்குச் சேவை செய்வதே அவளுக்குப் புனிதமானது. காந்திஜியோடு கலந்துபேசி பிரம்மச்சர்ய விரதத்தையும் கடைப்பிடித்தாள். சபர்மதி ஆசிரமத்திற்கு அவள் வந்து ஓராண்டு ஆகிய போது இங்கிலாந்தில் அவளுடைய தந்தை இறந்த செய்தி வந்தது.
இங்கிலாந்து சென்று தாயையும் உறவுகளையும் சந்தித்து வரும்படி காந்திஜி ஆலோசனை சொல்லியபோது, அவள் இங்கிலாந்து செல்ல விரும்பாமல், காந்திஜிக்குப் பணிவிடை செய்வதிலேயே கவனம் செலுத்தினாள். காந்திஜி சிறைசென்றபோதெல்லாம், அவளைப் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாதென்றும் நிர்மாணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் காந்திஜி ஆணையிட்டதால், அதன்படி அவள் பணிகள் அமைந்தன. நிர்மாணப் பணிகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக அவள் பீகாரிலிருந்து பயணம் புறப்பட்டாள். அவள் வருவதை அறிந்த ஆந்திர மக்கள் ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் மகத்தான வரவேற்புக் கொடுக்கக் குழுமினர்.
ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் அவள் காலடி படுவதற்கு முன்பே போலீசார் குழுமியிருந்த மக்களை அடித்து விரட்டினர். ஆம்! வெள்ளைக் கார நிர்வாகத்திற்கு அந்த வெள்ளைக் காரியின் செயல்கள் வெறுப்பைத் தந்தன. இந்தியாவில் இங்கிலாந்துக்காரர்கள் செய்யும் கொடுமைகளைப் பட்டியலிட்டு, ரகசியமாக வெளிநாடுகளுக்கு அவள் அனுப்பினாள். இந்தச் செய்திகள்தான் வெளிநாடுகளில் வெள்ளையரைப் பற்றிய மெய்யான செய்திகள் பரவச் செய்தன. இதை அறிந்த வெள்ளை அரசு அவளைக் கைது செய்து மூன்று மாதங்கள் சிறை வாழச் செய்தது. தண்டனை முடிந்து வெளிவந்த அவளை பம்பாயிலிருந்து போலீஸார் வெளியேற்றினர். பீகாருக்குச் சென்றாள்; அங்கிருந்தும் வெளியேற்றப் பட்டாள். காசிக்குச் சென்றாள். அங்கே மலேரியா நோய் அவளைத் தாக்கியது. அவளைக் கவனித்துக் கொள்ள ஒரு நர்ஸ் அனுப்பிவைக்கப்பட்டாள்.
அந்த நர்ஸ் ஆங்கில அரசின் ஒற்றர். நலம் பெற்றதும் மீண்டும் பம்பாய்க்குத் திரும்பினாள். ரயில் நிலையத்திலேயே கைது செய்யப்பட்டு ஆர்தர் சாலைச் சிறையில் அடைக்கப்பட்டாள். இப்படி அவளுடைய உழைப்பு இந்திய மக்களுக்காகவும், தாம் பிறந்த இங்கிலாந்து தேச ஆளும் வர்க்கத்திற்கு எதிரா கவும் அமைந்தது. தேசம் சுதந்திரம் அடைந்த பின்பும் அவளுடைய நிர்மாணப் பணிகள் தொடர்ந்தன. மதவெறியனால் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவள் ரிசிகேசத் தில் இருந்தாள்.
இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு மக்கள் டில்லிக்குப் பறந்தனர். ஆனால் அவள் மட்டும் காந்திஜி சொல்லியபடி இருந்த இடத்திலிருந்தே அஞ்சலி செலுத்திவிட்டு நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டாள். காந்திஜியின் மறைவு அவளைக் கலங்கச் செய்தது. இருப்பினும் காந்திய சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்வதில் தீவிரமானாள். ஆனால் சுதந்திரம் பெற்றபின் இந்தியாவை ஆள வந்தவர்கள் அவளுடைய பணிகளுக்கு கை கொடுக்க மறந்தனர். அதனால், இந்தியாவைவிட்டே அவள் வெளியேறினாள்.
வியன்னாவிற்குச் சென்று இசைமேதை பிதோவன் சுற்றித்திரிந்த காடுகளில் அவள் சுற்றினாள். ஆம்! சிறு வயதில் அவளைப் பற்றிய இசை ஆவர்வமும் பீதோவன் பிடிப்பும் அப்போதும் கை கொடுத்தது. இறுதியாக காந்திஜி நினைவுகளுடன் 90வது வயதில் அவள் மறைந்தாள். பெற்றோரால் மாடலின் ஸ்லேட் என்று பெயரிடப்பட்டு, காந்திஜியால் என் மகள் என்று அழைக்கப்பட்டு, காந்திஜியால் மீரா பென் என்று பெயர் சூட்டப்பட்ட அந்த இங்கிலாந்து சுதந் திரப் பறவை, இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டு, இறுதியில் வியன்னாவில் கண்ணை மூடியது.
1 comment:
காந்திஜி மகள்னு சொல்றீங்க... அவங்க போட்டோவை காணோம்ல....
Post a Comment