Thursday, July 3, 2008

பீட்டன்கோர்ட் உள்பட 15 கொலம்பிய பிணைக்கைதிகள் மீட்பு தொண்டு நிறுவனத்தினர் போல் நடித்து ராணுவத்தினர் சாகசம்

பொகோடா: கொலம்பியா கொரில்லா போராளிகளிடம் பல ஆண்டுகளாக பிணைக்கைதிகளாக இருந்த அதிபர் தேர்தல் முன்னாள் வேட்பாளர் இங்க்ரிட் பீட்டன்கோர்ட் உள்பட 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தொண்டு நிறுவனத்தினர் போல் நாடகமாடிய ராணுவத்தினர் கொரில்லாக்களை ஏமாறச் செய்துள்ளனர்.
அமெரிக்க ஆதரவு ஆட்சி நடைபெறும் கொலம்பியாவில் ஆட்சி முறை மாற்றம் வேண்டி, ஆயுதமேந்திய இடதுசாரி கொரில்லா போராளிகள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அடர்ந்த காட்டுப் பகுதியில் முகாம் அமைத்து பதுங்கியுள்ள அவர்கள் 40க்கும் மேற்பட்டோரை கடத்திச் சென்று பல ஆண்டுகளாக காட்டுப் பகுதியில் பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர். அவர்களிடமிருந்த பிணைக்கைதிகளில் மிக முக்கியமானவர்கள் பிரெஞ்சு - கொலம்பிய கூட்டு குடியுரிமை பெற்ற இங்க்ரிட் பீட்டன்கோர்ட் என்ற பெண் அரசியல்வாதி ஆவார்.
இவர் 2002ம் ஆண்டு நடைபெற்ற கொலம்பிய அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்துக்காக ஊரகப் பகுதியன்றில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கொரில்லாக்களால் கடத்தப்பட்டார். கொரில்லாக்களிடம் அகப்பட்டவர்களில் அடுத்து முக்கியமானவர்களாக கருதப்பட்டவர்கள் மார்க் கொன்சால்வ்ஸ், கெய்த் ஸ்டான்செல், தாமஸ் ஹோவஸ் என்ற 3 அமெரிக்கர்கள் ஆவர். அமெரிக்க ராணுவத்துக்கு தேவையானப் பொருட்களை சப்ளை செய்யும் காண்ட்ராக்டர்கள். இவர்கள் 3 பேரும் 2003ம் ஆண்டு பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் கொலம்பிய காட்டுப் பகுதியில் இறக்கப்பட்டது. அப்போது அவர்களை சுற்றி வளைத்த கொரில்லாக்கள் கடத்திச் சென்று பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர். இவர்கள் உள்பட 45க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் கொலம்பிய கொரில்லாக்களிடம் இருந்தனர்.
கொரில்லாக்களால் பெரிதும் மதிக்கப்படும் வெனிசூலா அதிபர் சாவேஸ் எடுத்த பெரும் முயற்சியின் காரணமாக 5க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் ஈகுவடார் நாட்டு எல்லைக்குள் நுழைந்து 21 கொரில்லாக்களை கொலம்பிய ராணுவம் சுட்டுக் கொன்றதால், அமைதி முயற்சிகளிலிருந்து சாவேஸ் விலகிக்கொண்டார். இந்த சூழலில் ராணுவ பலம் மூலம் பிணைக்கைதிகளை மீட்க முடியாது என முடிவு செய்த கொலம்பிய ராணுவம் தந்திரத்தின் மூலம் மீட்க முடிவு செய்தது.
ராணுவ உளவுப் பிரிவு மூலம் கொரில்லா முகாம் இருக்கும் இடத்தை அறிந்த ராணுவக் குழு ஒன்று வெள்ளை நிற ஹெலிகாப்டரில் அடர்ந்த காட்டுப் பகுதியின் மேல் பறந்தது. தாங்கள் தொண்டு நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகள் என வானில் இருந்தபடியே கொரில்லாக்களுக்கு தகவல் தெரிவித்த அவர்கள், இறுதியில் கொரில்லாக்கள் ஒப்புதல் அளித்தவுடன் முகாம் இருந்த இடத்தில் தரை இறங்கினர். . புரட்சியாளர் சே குவேரா படம் உள்ள டி-சர்ட் பனியன், கொரில்லாக்கள் அணியும் பேண்ட் என புரட்சி எண்ணம் கொண்ட தொண்டு நிறுவனம் போல தங்களை காட்டிக்கொண்டனர்.
3 நாட்களுக்கும் மேலாக முகாமில் இருந்த ராணுவத்தினர், கொரில்லாக்களின் முழு நம்பிக்கையை பெறும் வகையில் நடந்து கொண்டனர். இறுதியில் பிணைக்கைதிகளில் முக்கியமானவர்களுடன் கொரில்லா தலைவர் அல்ஃபான்சோ கானோவை சந்திக்க அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். மற்றொரு முகாமில் தங்கியிருந்த கானோவை சந்திக்க ஹெலிகாப்டரில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 3 கொரில்லா வீரர்கள் வழிகாட்டலுடன் பீட்டன்கோர்ட் உள்ளிட்ட 15 பிணைக்கைதிகளை ஏற்றிய வெள்ளை நிற ஹெலிகாப்டர் கானோ தங்கியிருந்த முகாம் நோக்கி புதன்கிழமை காலை பறக்கத் தொடங்கியது.
வானத்தில் உயரத்துக்கு சென்ற பிறகு 3 கொரில்லாக்களை கைது செய்த ராணுவத்தினர், 15 பிணைக்கைதிகளும் விடுதலை பெற்றுள்ளதாக உரத்த குரலில் கத்தினர். அப்போதுதான் வந்திருப்பது தொண்டு நிறுவனத்தினர் அல்ல, கொலம்பிய ராணுவத்தினர் என்பது 15 பிணைக்கைதிகளுக்கும் தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் பொகோடா விமானப் படை தளத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்கியது.
எதிர்பாராத நேரத்தில் 6 ஆண்டுகள் கழித்து விடுதலை ஆன மகிழ்ச்சியில் பீட்டன்கோர்ட் உள்ளிட்ட 15 பேரும் மகிழ்ச்சியில் கதறி அழுதனர். பீட்டன்கோர்ட் உள்ளிட்ட 15 பிணைக்கைதிகள் மீட்கப்பட்டது உரிபே அரசுக்கு மகிழ்ச்சியையும், கொரில்லா போராளிகளுக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும் 9 ஆயிரம் வீரர்களுடன் செயல்பட்டு வரும் கொரில்லா படையின் செயல்பாடுகள் இனி மேலும் தீவிரமடையும் என்பதே உண்மை என்ற கருத்தும் எழுந்துள்ளது.

No comments: