Tuesday, March 23, 2010

ஓவியம் தீட்டி போராட்டம்

சென்னையில் ஓவியர் எஸ்வந்திரன் பொய் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து கண்டனக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. 8 மாதங்கள் இரவு பகலாக சிற்பங்களுள் சிற்பமாக மூழ்கிக் கிடந்த கலைஞனின் மனம் கலைக்கும் கொடூரப் பித்தேறிய கல்லூரி முதல்வரின் தொல்லை தாளாது ஒரு கணம் தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினான்.

கலையற்ற அதிகார மனம் இறங்கியது பழி வேட்டையில். பிரச்சினையோடு எந்தத் தொடர்பும் அற்ற எஸ்வந்திரன், ஆனந்த குமார் இருவரும் குற்றவாளிகளைப் போல கைவிலங்கிடப்பட்டு, ஓர் இரவு முழுக்க காவல் நிலையத்தில் வதைக்கப்பட்டனர். எஸ்வந்திரன் பிணையில் வெளிவர முடியாத வழக்கு புனையப்பட்டு புழல் சிறையில் தள்ளப்பட்டார். எந்தப் பிரிசீலனையும் இல்லை. எந்த விசாரணையும் இல்லை. நியாயத்தின் நிழல் கூடத் தலைகாட்ட வாய்ப்பு கிட்டவில்லை.


கலைஞர்கள் மீதான நியாயமற்ற இக்கொடூரத் தாக்குதலைக் கணடிக்காமல் விடுவது அதிகார நோய்க்கூற்றை உறுத்தலின்றி உலவ அனுமதிக்கும் பெரும்பிழையாகி விடும்.பொய் வழக்குகளை வாபஸ் வாங்கக் கோரியும் பொய் வழக்கு போடத்தூண்டிய தற்காலிக முதல்வர் மனோகரன் மீதும் பொய் வழக்கு போட்ட காவல் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் போராட்டம் நடத்தப்பட்டது.இந்த போராட்டத்தில் ஏராளமான ஓவியர்கள் கலந்து கொண்டு ஒவியங்களை வரைந்தனர். பேச்சாளர்கள் கலந்து கொண்டு தனது கருத்துகளை தெரிவித்தனர்.

No comments: